அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Tuesday, 24 May 2011

---- பக்குவம்----




கோடை காலம் மெல்பேர்ணில் தொடங்கி விட்டது. ஒன்று விட்ட ஒரு நாள் வெயிலின் கொடுமை வாட்டி வதைக்கும். பகல் முழுவதும் 45 பாகை என்று இன்பத்தமிழ் வானொலியில் கேட்ட ஞாபகமாக இருந்தாலும் அதை விடக் கூடுதல் என்றே உணர முடிந்தது. பகல் முழுவதும் கொழுத்தும் வெயில். மாலை இருண்டு - என் மனம் போல - மழை இருள் கருக்கட்டியது. அதிகாலை ஒரு மணி வரையும் காத்திருந்த வானம் சோவெனப் பொழியத் தொடங்கியது. அந்த இருள் சூழ்ந்த பொழுதினில் வீதிகளிலும் வீடுகளிலும் யாரும் விழித்திருக்கவில்லை.

என் வீடும் மனமும் அப்படித்தான். நான் ஓவென்று வாய் விட்டு அழுகின்றேன். என்னைத் தேற்றவோ பரிவு கொள்ளவோ யாரும் வீட்டில் இல்லை. பகல் முழுவதும் வெயில் அடித்து கொடுமை செய்த வானம், தான் செய்தது தவறு என்று நினைத்து அழுது மழையாகி வழிகின்றதோ இல்லையோ - நான் என் தவறை உணர்ந்து மனம் வருந்தி அழுகின்றேன்.

புத்த பெருமானுக்கு போதி மரத்துக்குக் கீழே ஞானம் கிடைத்தது காலையிலோ மாலையிலோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெளிந்த ஞானம் அதிகாலை விடிந்து கொண்டுவர பரிபூரணமான தெளிவும் திடமான நம்பிக்கையும் பிறந்தது.

தவறு செய்த மனிதன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு அந்தத் தவறை திருந்தி வாழ்பவனாக இருந்தால் அவன்தான் சிறந்த மகான் என்று என்று எங்கோ படித்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது. இப்போதுதான் நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் மனதில் வந்து போனது. அப்படிச் செய்திருக்கலாம் இப்படிச் செய்திருக்கலாம் என்று தவறு செய்த மனத்திற்கு திருந்தி வந்த மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று கண்ணதாசன் படித்தானோ!

தொலைபேசி அடித்தது. ஒடிப்போய் எடுக்கின்றேன். அழுத மனமும் குரலும் மறுமுனையில் இருந்து வரும் குரலைக் கேட்டதும் பேசமுடியாமல் சிக்கி சின்னாபின்னமாகியது.

சரி என்னை மன்னியுங்கோ. ஒரு தரம்...  எனக்கு இனி ஒரு தரம் சந்தர்ப்பம் தந்து பாருங்கோ. நான் காலில் விழுந்து கேட்கின்றேன். தொலைபேசியை அடித்து சாத்துகின்றாள் மறுமுனையில்.

தவறு செய்த மனமும் திருந்திய மனமும் சண்டை போடுகின்றார்கள். தவறு செய்த மனத்தால் எழுந்திருக்க முடியவில்லை. திருந்திய மனம் எழுந்து தயவு செய்து என்னை விட்டு விடு என்று சொல்லிக் கொண்டு வந்து என்னோடு ஒட்டிக் கொள்கின்றது.

கிளாசை எடுத்து தண்ணீரை நிரப்பிக் குடிக்கின்றேன். காய்ந்து போன என் தொண்டையும் மனமும் குளிர்கின்றது.

மன நல ஆலோசகரும் குடும்ப நண்பருமான திருமதி சாந்தினி குகநாதன் அவர்கள் எனது மனைவியான நகுலாவைக் காரில் கூட்டிக் கொண்டு வந்து காரை நிறுத்தி இறங்குகின்றார். நகுலாவும் மகள் தமயந்தியும் இறங்கி வருகின்றார்கள். என்னைக் கண்டு பயந்து தாயைக் கட்டிக் கொள்ளுகின்றாள் தமயந்தி.

நகுலா முன்னால் நடந்து வருகின்றாள். நான் ஓடிப் போய் அவள் கால்களைப் பற்றிக் கதறி அழுகின்றேன். திடீரென்று மயக்கமுற்று கீழே தரையில் வீழ்ந்து கொள்கின்றேன். திடுக்கிட்ட அவர்கள் என்னைத் தாங்கிக் கொண்டு போவது எனக்கு விளங்குகின்றது.

என்னைக் கட்டிலில் கிடத்தியதும் முகத்துக்குத் தண்ணீர் தெளித்தும் குடிக்கவும் தந்தனர். எனது மயக்கம் தெளிகின்றது. எனது மனைவியும் மகளும் வெளியில் போகின்றார்கள். சாந்தினி குகநாதன் எனது அருகில் வந்து எனது கரங்களைப் பிடித்துக் கொண்டு பேசுகின்றார்.

"சிறிதரன்.. கவனமாகக் கண்ணை மூடிக் கொண்டு அந்த இடத்தில் நிற்பதாக நினையுங்கள். அந்திமாலை ஒரு அமைதியான கடற்கரை மணலில் காற்று வாங்கிக் கொண்டு நடந்து போகின்றீர்கள். எதிரே தேவதை மாதிரி நடந்து வருகின்றாள் உங்கள் மனைவி நகுலாம்பிகை."
சாந்தினியின் குரல் மேலெழுந்தும் தாழ்ந்தும் ஒலிக்கின்றது. என் ஆழ் மனத்தூறல்களில் நகுலாவின் விம்பம் பெரிதாக அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகின்றது.

"சிறிதரன் உங்கள் ஆழ்மனதைத் திறந்து சொல்லுங்கோ நகுலாவை அடைய என்ன தவம் செய்தனீர்கள்."

எனக்கு அப்போது கல்யாணம் பேசினார்கள்.

"என்ன சிறி இன்னும் கல்யாணம் முற்றாகவில்லையா? ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கு மாதிரியோ?"

என்னைக் காண்கின்றவர்கள் கேட்கும் கேள்வி.

எனக்கு திருமணம் பேசி தரகர் மூலமாக நிறையப் பெண்களின் புகைப்படமும் சாதகமும் வந்த வண்ணம் இருந்தது. சாத்திரியார் மூலமாக பொருத்தம் பார்த்தபோது ஒன்று பொருந்தினால் ஒன்று பொருத்தம் இல்லாமல் தட்டிப் போனது.

இந்த நேரம்தான் நகுலாம்பிகையின் படமும் சாதகமும் வந்தது. அதை நான் பார்த்தபோதுதான் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றது.

நான் நகுலா மதுரா கௌரி வசந்தி சிவபாலன் சந்திரபோஸ் கோபால் வரதராசா புகனேஸ்வரன் தெய்வேந்திரன் கமலேஸ்வரன் சிறிரங்கன். எங்களின் பாடசாலை வகுப்பில் நிறைய மாணவர்கள். இதில் நகுலா மதுரா கௌரி சிவபாலன் சந்திரபோஸ் நான் - இவர்கள் எல்லோருக்குள்ளும் எப்போதும் போட்டிதான். முதலாவது இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடிக்க நடக்கின்ற போட்டியில் ஒருமுறை எனக்கும் நகுலாவுக்கும் இரண்டாவது இடம் தந்தார்கள்.

நகுலாவின் திறமைக்கு அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் தவறாகப் பரீட்சை எழுதியதாகவும் என்னை எல்லோர் முன்னிலையிலும் காட்டிக் கொடுத்ததோடு என்னுடனும் நண்பர்களுடனும் எப்போதும் கர்வமாகவே நடந்து கொண்டாள். நகுலாவின் தங்கை அமுதா என்னுடன் அன்பாகவும் பரிவுடனும் நடப்பதை வலு கட்டாயமாகத் தடுத்தாள்.

நகுலா நல்ல திறமையானவள். அழகான கையெழுத்து ஆளுமை தலைமை மாணவியாகவும் தலைமைத்துவமாகவும் நடந்து கொள்வாள். எனக்கு அவளை நன்றாகப் பிடித்திருந்தது. ஆனால் என் ஆணின் வல்லாதிக்கம் அவளின் திறமைக்கு முன் போட்டியிட முடியாமல் அவளை அடக்கிப் பழிவாங்க நான் காத்திருந்தேன்.

பாடசாலையின் இறுதி ஆண்டில் நகுலாவும் அமுதாவும் கௌரியும் சிவபாலனும் திறமைச் சித்தியடைந்து உயர்தரம் படிக்கப் போய் விட்டனர். நகுலா போகும் போது என்னைப் பார்த்த பார்வை இருக்கே - அதுதான் என் வாழ்க்கையின் குறுக்கு வழிக்கு வெட்டிய குழி.

காலங்கள் கடந்தது. நாட்டில் நல்லவர்களும் வல்லவர்களும் பாதைகள் மாறிப் பயணங்கள் தொடர்ந்தனர். நானும் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தேன்.

எனக்கு மணமகள் தேடிக் களைத்து என் வளர்ப்புத்தாய் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தாள். யாழ் வேளாளர் குலத்தில் வந்த அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற கைநிறையச் சம்பாதிக்கும் மணமகனுக்கு மணமகள் தேடுகின்றனர்.

எனது விளம்பரத்தைப் பார்த்து அமிர்தலிங்கத்தார் 'அட நம்மிட ஊர் பெடியன்' என்று திருமணத்திற்கு எல்லா ஒழுங்குகளையும் செய்தனர். அதில் என்ன ஆச்சரியம் என்றால் சாதகப் பொருத்தம் நூற்றுக்கு நூறு இணைந்ததாம்.

போட்டோவைப் பார்த்த நகுலா முதலில் மறுப்பு தெரிவித்துத்தான் இருக்கிறாள். பின்பு தன்னை சுதாகரித்து தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்கி இருக்கிறாள்.

நகுலாவின் கர்வத்தை அடக்க வேண்டும் என்ற என் மனதின் எண்ணத்தின் வலையில் தானாகச் சிக்கும் நகுலா என்ற சிங்கத்தை விடுவதா?

எனக்கும் நகுலாவுக்கும் திருமணம் என்ற போது எனது நண்பர்கள் யாருமே நம்பவில்லை. ஏன் அவளின் தங்கையான அமுதாவே நம்பவில்லை என்றால் பாருங்களேன். நான் நகுலாவை திருமணம் செய்ய, திருமணத்திற்கு முதல் நாள் மாலையில்தான் ஊரில் போய் இறங்கினேன். அவளைப் பார்த்ததும் என்னால் என்னையே நம்ப முடியவில்லை. அவளுக்கு நான் பொருத்தமில்லாதவன் என்பது எனக்குத் தெரிந்தது. அவளுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவளுடைய திறமையையும் ஆளுமையையும் கண்டு வியந்தேன்.

எட்டு மாதங்களில் விசா கிடைத்தது. அவள் வரும் வரையும் அவளுடன் தொலைபேசியில் கதைப்பதை நிறையவே குறைத்தேன். அவள் வந்ததும் பல மாதங்களாக வேலை வேலை என்று இரவு பகலாக அவளுடன் மனம் திறந்து பழகுவதைத் தவித்துக் கொண்டேன்.

அவள் வந்ததும் அவளோடு உயர்தரம் பல்கலைக்கழகம் என்று படித்த நண்பர்கள் நிறையப் பேரிடம் இருந்து பல தொடர்புகள் வரும் போது நான் பயந்து போனேன். அவைகளை எல்லாம் நானே இரகசியமாக நிறுத்திக் கொண்டேன்.

நான் அவளை சந்தோசமாக வைத்திருப்பதாக நடந்து கொண்டாலும் எனது ஆளுமைக்கும் கட்டுப்பாட்டிற்கும் அவளைக் கொண்டு வந்தேன்.

ஒரு புலி மாதிரி வந்த அழகான பெண்ணை அடக்கி பூனையாக்கினேன். தமயந்தி பிறந்த போது எல்லா வேலையையும் நானே செய்தேன். இரண்டாவது மகன் பிறந்தபோது நகுலாவின் தாயை வரவழைத்து பிரசவம் பார்த்தேன்.

விலையுயர்ந்த நகைகளையும் விலையுயர்ந்த சாறிகளையும் வேண்டிக் கொடுத்து மகிழ்ச்சிச் சிறையில் அவளை அடைத்தேன். நான் வேண்டும் உடைகளையும் விரும்பும் நிறங்களையும் அவளுக்குப் போட்டு மகிழ்ந்தேன். அது மட்டுமில்லை தமயந்தியையும் எனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன்.

அதோடு என் மகனுக்கு என்னைப் போல நிறைய சுதந்திரங்களை கொடுத்து அவனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாது வளர்த்தேன்.

என்னுடைய சின்ன வயசு ஆசைகள் எது எது நடக்காமல் போனதோ அதை எல்லாம் அவனுக்கு செய்து அழகு பார்த்தேன். அதாவது யாழ்ப்பாணத்தில் ஆட்டைக் கட்டி வைத்து பிலா இலையைக் குத்திக் கொண்டு வந்து சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள். ஆனால் மாட்டை அவிட்டு விட்டு வளர்ப்பார்கள். அது போன்று நான் மகளையும் மகனையும் வளர்த்தேன்.

நகுலாவிற்கு எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இல்லை. அவளுக்கு விளங்குகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நிறைய நாட்கள் அவள் தனிமையில் அழுதிருக்கிறாள்.

நகுலா பலமுறை தானும் வேலைக்குப் போக வேண்டும் என்று தன் நண்பர்களுடன் பேசும் போது சொல்லியிருக்கிறாள்.

நகுலா வேலைக்குப் போனால் என்னை விடக் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும். அது மட்டுமில்லாமல் ஒரு நல்ல சிறந்த வேலையில் அவள் இணையக்கூடும் என்பதால், வேலைக்கு அவளை அனுப்பும் ஆசையைத் தடுத்து, வீட்டில் இருந்து கொண்டு எங்கள் குடிமனைகள் எல்லாவற்றிற்கும் பேப்பர் விளம்பரப்பத்திரிகை போடும் வேலையை பல சிரமங்கள் மத்தியில் எடுத்துக் கொடுத்தேன்.

வேலையில் சேர்ந்து சில மாதங்களிலேயே அந்த வேலையை ஒழுங்கு செய்து கொடுத்த பொறுப்பதிகாரி நகுலாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, "நகுலா நீ மிகவும் திறமையாக செய்கிறாய். சரியான நேரத்தில் தங்களுக்கு விளம்பரங்களும் பத்திரிகைகளும் கிடைப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அதனால் உங்களுக்கு பதவி ஒன்று எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறது. எம்முடன் இணையுங்கள்" என்று அந்த அதிகாரி வீட்டில் வந்து சொன்னபோதுதான் என்னால் எதையும் சொல்லித் தடுக்க முடியவில்லை.

நான் இதுவரையும் போர்த்திருந்த பசுத்தோலை தூக்கி எறிந்துவிட்டு வந்திருந்த அதிகாரியான அந்தப் பெண்ணின் முன்னாலேயே அநாகரீகமாக நடந்து கொண்டேன். எனது உச்சக் கொடுமையின் வெளிப்பாடும் எனது இயலாமையின் வெளிப்பாடும் அன்றுதான் அரங்கேறியது.

நான் செய்தது தவறு. நான் வெட்கத்தைவிட்டு மனம் திறந்து சொல்லி முடிக்கின்றேன்.

சாந்தினி குகநாதன் எல்லாவற்றையும் நிதானமாக கேட்டவர் "இது ஒரு வகை மனநோய் சிறிதரன், நீங்கள் மனம் திறந்து எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள். இனி உங்களுடைய மனதில் எதுவுமில்லை. இந்தாங்கோ உங்கிட நகுலா, மகள் தமயந்தி, மகன் ஆதவன்" மூன்று கைகளையும் இணைத்து என்னிடம் தருகிறார் சாந்தினி.


0 comments:

Post a Comment