அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Saturday, 25 April 2020

வெண்ணிலவு


வெண்ணிலவு வானத்தில்
பாலொழியை    தூவும்
வெண்மணலில் என் பிள்ளை
“அ”எழுதிப் பழகும்

கண்ணயர்ந்து போகையிலும்
காற்று வந்து களையும்
கவி எழுதிப் பாடச் சொல்லி
தமிழ் உருகி வழியும்

மடி தூங்கும் என் பிள்ளை
கதை கேட்டு அழு(கு)ம்
மண்ணாட தமிழ் மன்னர்
கதை கேட்டுத் தூங்கும்

பாட்டி வடை  சுட்ட கதை
சொல்ல மனம் இல்லை
பறவைகளும் மிருகங்களும்
ஏய்த்து வாழ்வதில்லை

                                               ஆவூரான்

Friday, 17 April 2020

மாமரமே மாமரமே

அந்த மாமரம் தான் எங்கள்
மண்ணுக்கு அழகு-இந்தக்
குயில் வாழ தந்தது உணவு

கூடு கட்டி வாழ்வதற்கோ
குயிலுக்குத் தான் தெரியாது
கூடு இல்லாப் போதினிலும்
வீடு தந்த மாமரமே

வளர்த்த காகம் துரத்திக் கொத்த
வழி தவறிப் போன என்னை
வாழ வழிகாட்டி
வளர்த்து விட்ட மாமரமே

மாவிருந்து கூவியதால்
மாங்குயிலே என்றழைத்தார்
பேர் தந்த மாமரமே
பேய்கள் உனை எரித்தாரோ

கூடிழந்தேன் கொத்தும்
காகத்தின் கொடுமை கண்டேன்
காலம் ஒன்று வாராதோ
கூடு கட்டி நான் வாழ
முளையாதோ மாமரமே

                                                   ஆவூரான்




Thursday, 16 April 2020

தூக்கனாங் குருவி கூடு

தூக்கனாங் குருவிக் கூடு

தூக்கனாங்குருவிக் கூடு
தொங்குது மரத்தில் பாரு
யாரிடம் கற்றாரு-இக்
கட்டிடக் கலையை குருவியாரு

விஞ்ஞானமும் மெய் சிலிர்க்கும்
விந்தையான வீடு-எந்த
மெஞ்ஞானமும் அறியாத
மென்மையான கூடு

உள்ளுக்குள் ஒரு அறை
உறங்க சின்ன மெத்தை
வாசல் ஒரு குழல் போல
வடிவாகத் தானிருக்கும்-கூடு
காற்றடிக்கும் கடும் புயலடிக்கும்
மழை வந்து சோவென்று தானடிக்கும்
கூடாடும் தொட்டிலாக -குருவி
சொகுசாகத் தான் தூங்கும்

தூக்கனாங் குருவிக் கூடு
தொங்குது மரத்தில் பாரு

 

Sunday, 26 June 2011

 வெண்ணிலாவைச் சுற்றி
விளையாடும் விண்மீன்களே-நீங்கள்
வருவீர்களா நிலத்தில்
விளையாடவே        ( வெண்ணி)

வீட்டில் யாரும் இல்லை
வீண் தொல்லை ஏதும் இல்லை
சேர்ந்து விளையாட இங்கு-வேறு
செல்லம் கூட இல்லை        (வெண்ணி)

பாவாடை கட்டிக் கொண்டு
பாட்டுப் பாடி ஆடலாம்
பால் சோறும் உண்ணலாம்

பாயாசமும் கட்டிக் கொண்டு
பால்நிலாவுக்கு கொடுக்கலாம்-நான்
பாடும் தமிழைக் கேட்டு-நீங்கள்
விண்ணில் எங்கும் தூவலாம்   (வெண்ணி)
                                               கவிஞர் ஆவூரான்.